நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காகிதங்களைக் கொண்டு பல்வேறு பூக்களும், அலங்காரப் பொருட்களும் செய்யும் போட்டி நடந்தது. ஒரிகாமி என்றழைக்கப்படும் காகிதப் பூ போட்டியில் சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொங்கும் பூக்கள், மேஜை பூக்கள், சுவர் பூக்கள், பூங்கொத்துகள், பரிசுப்பெட்டகங்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் அலங்காரப் பொருட்களை செய்தனர். வகுப்புவாரியாக முதல் மூன்று சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வண்ணமிகு படைப்புகள் இரு தினங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்; காட்சிப்படுத்தப்பட்டன.

அனைத்து பள்ளி சிறார்களும், ஐநூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும், ஆசிரிய ஆசிரியைகளும் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கிய பள்ளி முதல்வர் நல்லாசிரியர் பாண்டியராஜன் பேசுகையில் ஓரிகாமி போல நடனம், வாய்ப்பாட்டு, கைவினைப்பொருட்கள் செய்தல், பேச்சுப்போட்டி, அறிவுத் திறன் போட்டி, வினாடி வினா ஆகியப் போட்டிகளும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவதாகவும் இவ்வாண்டு ஓரிகாமி போட்டியில் நூற்றுக்கணக்கானக் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு காகிதப் பூ வேலைப்பாடும் அசலாகக் கடையில் விற்பவைப் போன்றே செய்யப்பட்டுள்ளன என கண்காட்சியைக் கண்ட பெற்றோர் தெரிவித்தனர்.

படம்: வண்ணமிகு காகிதப் பூக்களை பள்ளி மாணவ மாணவியர் பார்வையிடுகின்றனர்.