தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது அறிவியல் புத்தாக்க விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான கண்காட்சியை மாவட்ட அளவில் நடத்தியது. அதில் மேற்படி துறையின் பத்தாயிரம் ரூபாய் புத்தாக்கப் பரிசு பெற்றிருந்த நாகை மாவட்ட பள்ளி மாணவி மாணவியர் கலந்து கொண்டனர். பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கெசியா பியட்ரிஸ் தன்னுடைய கண்டுபிடிப்பான தானியங்கி குப்பை பிரிக்கும் இயந்திரத்தை காட்சிபடுத்தினார். அக்கருவி குப்பைகளை கொட்டும் பொழுதே அவற்றை மக்கும் குப்பை, மக்காதக் குப்பை என நுண்ணறியும் கருவிகள் மூலம் தானியங்கியாக பிரித்துவிடும் என்றும் விளக்கினார்.
இம்மாணவிக்கு மாவட்ட இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் கலந்துகொண்டு கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவியை முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளியின் அறிவியல் மன்ற நிர்வாகிகள், முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டினர்.