தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் பல்வேறு தமிழ் போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்தி ரொக்கப்பரிசுகள் வழங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22 அன்று மாநில அளவில் மேடைப்பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல் ஆகியவற்றில் இறுதிச் சுற்று போட்டிகள் மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நடத்தப்பட்டன. நாகை மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற பொறையார் பள்ளி மாணவி இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்ட்டார். சர்மிளா காடஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சென்ற பிரீத்தி என்கிற அம்மாணவி மாநில அளவில் இரண்டாம் இடத்தை வென்று தமிழ் வளர்ச்சித் துறையின் சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் விரைவில் சென்னை தலைநகரில் தமிழ் அமைச்சகத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாணவி மாவட்ட அளவில் வென்று பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
